Posts

Showing posts from February, 2011

பயணம்

காலத்தின் படிகளில் பின்னோக்கிச் சென்று உற்று நோக்கி, உண்மையான உருவத்தை ஒரு கேள்வி கேட்க கண் விழித்து கனவுகளைத் தொலைத்து தொடங்கும் ஓர் ஆன்மீகப் பயணம் நிகழ்கால என்னை, கடந்த கால நான் எதிர் கொண்டு, பேசத் தயங்கி, உள்ளம் நடுங்க, கேட்ட ஒரே கேள்விக்கு விடை என்ன? "எங்கே என்னைத் தொலைத்தாய்?" விடை தேடி மீண்டும் தொடங்கும் ஆத்மார்த்த யாத்திரை கட்டுங்கடங்காத காலம் எட்டுத்திக்கிலும் எண்ணம் தட்டுத்தடுமாறி தொடங்கிய வாழ்வின் முடிவில் பயணம் எவனோ ஆகும் முயற்சியில் முதல் தோல்வி இவனோ எனும் கேள்விக்கு விடை தேடி அவனும் அப்படித்தான் எனும் சமூக விதிக்குட்பட்டு வரையறை தாண்டியவர் கண்டு பெருமூச்சு விட்டு இதுதான் எனும் தொடக்கத்தில் முடிவுறும் பயணம்

இயலாமை

கண் முன்னே கொடூரங்கள் அன்றாட வாழ்வில் அத்தியாயமாகி இயலாமை எனும் அரணின் பின் மறைந்து இரக்கம் ஒரு சொல்லாக நீதி ஒரு துணுக்காக மனிதம் ஒரு புறம்; மனிதன் மற்றொரு புறம் காலத்தின் போக்கில் வாழ்வைக் கழித்து அநீதி கண்டு பொங்கி எழுவது அநீதி என்று நீதி அளக்கும் தராசில் ஒரு புறம் கனம்; மறுபுறம் கனக்கும் மனம் எப்போதாவது என ஒரு சொல் சாபத்துடன் வாழ்வில் முற்றுப்புள்ளி அற்று தொடரும் பல சாபங்கள் இயலாமைதான் வாழ்க்கையோ?